டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனை, செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று (டிசம்பர் 15ந்தேதி) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் சீர்திருத்த மசோதா உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோர் செய்தியளார்களுக்கு விளக்கமளித்தனர்.
அதன்படி, தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆதாரங்களின்படி, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான மூன்று முக்கிய மாற்றங்கள் மசோதாவில் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு இது விருப்பமாக மாற்றப்படும். இதனுடன், அடுத்த ஆண்டு முதல், புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஓராண்டில் நான்கு வாய்ப்புகள் வழங்கப்படும். தற்போது, ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்கு முன் 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதுபோல, செமிகண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்திக்கான சூழல் அமைப்பை இந்தியாவில் மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தனர். அடுத்த 6 ஆண்டுகளுக்கு செமிகண்டக்டர் சிப் மற்றும் அதனைச் சார்ந்த உதிரி பாகங்களை தயாரிக்க 76 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் ரூபே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை வழங்குவதற்கு ஆயிரத்து 300 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறினர்.
அதேபோல 2021-26 பிரதமரின் க்ரிஷி சிஞ்சாயி யோஜனாவை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இதன் மூலம் சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அமைச்சர்கள் கூறினர்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்