சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை இனி பக்தர்கள் அஞ்சல் மூலம் பெறலாம்
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருவாங்கூர் தேவசம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய பிரசாதமாக அரவணை பாயசம், அபிஷேக நெய், மஞ்சள்,குங்குமம் விபூதி ஆகியவை அளிக்கப்படுகின்றன. இந்நிலையில் தேவச வாரியமும் கேரள வட்ட அஞ்சல் துறையும் இணைந்து ஒப்பந்தம் இட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி நாடெங்கும் உள்ள சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் எந்த ஒரு அஞ்சல் அலுவலகத்திலும் பிரசாதம் கோரி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு முன்பதிவு செய்வோருக்கு விரைவு அஞ்சல் மூலம் கோவிலில் இருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கு ‘ஸ்வாமி பிரசாதம்” எனபெயரிடப்பட்டுள்ளது.
இதில் அரவணை பாயசம், அபிஷேக நெய், மஞ்சள், குங்குமம், விபூதி ஆகியவை இடம் பெற்றிருக்கும் . இந்த பிரசாதம் 3 வகைகளில் கிடைக்கும். அதன்படி ஒரு அரவணை பாயசம் மற்றும் இதர பிரசாதங்கள் கொண்ட பாக் ரூ.450க்கும் 4 அரவணை பாக்கெட் கொண்ட பாக் ரு.830க்கும், 10 அரவணை பாக்கெட் கொண்ட பாக் ரு.1510க்கும் கிடைக்கும். எத்தனை பிரசாதம் தேவைப்பட்டாலும் முன்பதிவு செய்ய முடியும்.