சென்னை

சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஊடகவியலர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் கைதை வரவேற்பதாகக் கூறி உள்ளது.

பிரபல யூ டியூபர் மாரிதாஸ் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.  இவர் தனது சமூக வலை தளங்களில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்.    அவ்வகையில் சமீபத்தில் அவர் டிவிட்டரில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து மதுரை திமுக நிர்வாகி பாலசுப்ரமணியன் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் மாரி தாசை காவல்துறையினர் கைது செய்தனர்.

பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் கிளைச்சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.   பாஜகவினர் மாரிதாஸ் கைது எதிர்த்து தமிழக அரசை குறை கூறி வருகின்றனர்.  மேலும் மோசடி  புகார் ஒன்றிலும் மாரிதாஸ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.   ஊடகவியலர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் கைதை வரவேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

“ஊடகங்களின் செயல்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பித்தும், ஊடகவியலாளர்களை நேர்மையான வகையில் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் என்பவரை, நியூஸ்18 தொலைக்காட்சி நிர்வாகத்தின் சார்பில் மூத்த பத்திரிகையாளர் வினய் சரவாஹி அளித்த மோசடி புகாரில் கைது செய்திருப்பதைச் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் வரவேற்கிறோம்.

போலியாக மின்னஞ்சலை உருவாக்கி, மோசடி செய்திருப்பதாகவும், அவரது செயலால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் வினய் சரவாஹி கடந்த 10.7.2020-ம் தேதி அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கைப் புலன் விசாரணை செய்துவந்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, மாரிதாஸை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. ஊடக செயல்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும்,
பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தும் வகையிலும் தான்தோன்றித் தனமாக அவதூறான வகையில் பேசியும் செயல்பட்டும் வந்த மாரிதாஸின் செயல்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் அப்போதே கண்டனம் செய்திருந்தது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அவர் மீது எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவு கூர்கிறோம்.

தாமதமானாலும் தற்போதைய இந்த நடவடிக்கை போலியான அவதூறு பேர்வழிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் என்று நம்புகிறோம். தங்கள் நோக்கங்களுக்கு ளைந்து கொடுக்காத பத்திரிகையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதும், அவர்களைப் பற்றியும் குடும்பத்தினரைப் பற்றியும் இழித்தும் பழித்தும் பேசுவதுமான போக்கு ஆரோக்கியமானது அல்ல. பத்திரிகையாளர்களை அவர்களது பணியில் இருந்து விலக்குவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் விடுக்கும் போக்கை எவர் ஒருவர் முன்னெடுத்தாலும் அத்தகைய போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

சமூகவிரோத சக்திகளிடம் இருந்து ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் தனிநபர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரது செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்”

எனக் கூறப்பட்டுள்ளது.