மதுரை: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தளபதி மரணம் தொடர்பாக விமானப்படை மற்றும் மத்திய அரசு மற்றும் மாநில திமுக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன்பேரில், பிரபல யுடியூபர் மாரிதாஸ் மதுரையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 153 ஏ, 504, 505 (2), 505 (1)பி சட்டப்பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து,யூடியூபர் மாரிதாஸை உத்தமபாளையம் கிளை சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.