கோயம்புத்தூர்
இன்னும் 10 அமாவாசைக்குள் திமுக ஆட்சி முடிவடைந்து அதிமுக ஆட்சியை பிடிக்கும் என முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறி உள்ளார்.
இன்று கோவை ஓசூர் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ ஜெயராமன் பேசும் போது, “இன்னும் 10 அமாவாசைக்குள் திமுக ஆட்சி பஞ்சராகி விடும். கட்சிகள் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. அதிமுக மக்களால் தொடங்கப்பட்ட கட்சி. திமுக பல பொய்களைக் கூறி ஆட்சியைப் பிடித்துள்ளது. கோவையில்.சொன்னதைச் செய்யாத திமுகவைக் கண்டித்து நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அடி வாங்குவதில் அதிமுகக்காரன் விண்ணைத் தொட்டு நிப்பான். ஆனால் அடிப்பதில் ஆகாயத்தைத் தாண்டி அடிப்பான். .நாங்கள் 6 மாத காலம் பொறுமையாக இருந்த காரணத்தினால் நாங்கள் என்ன பிஸ்கோத்து பார்ட்டிகளா? நாங்கள் சிலிர்த்து எழுந்தால் அதிமுக எதிரிகள் தாங்கமாட்டார்கள்.
அதிமுகவுக்குத் துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகவும், வளர்ந்ததாகவும் வரலாறு இல்லை. அதிமுக இயக்கத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறான் என தெரியாத சூழ்நிலை தான் இருக்கிறது. இந்த இயக்கம் எதற்கும் அஞ்சாது. அச்சப்படாது. நாங்கள் எதிரிகளை பத்து அமாவாசைக்குள் வீழ்த்திக் காட்டி 10 அமாவாசைக்குள் அதிமுக அரியணை ஏறும்” என அவர் தெரிவித்தார்.