கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 8
பா. தேவிமயில் குமார்
மழைத்துளி
மின்னலை
முத்தமிட்டவாறே
மண்ணுக்கு வருகிறாய் !
துளிகளில்
தூளி கட்டி
தரை இறங்குகிறாய் !
காற்றோடு
காதல் செய்தவாறு
கரை புரள வருகிறாயோ ?
உலகை சுற்றினாலும்
உனக்குப் பிடித்த
இடத்தில் இறங்குகிறாய் !
கருமேகத்தின்
கருவிலிருந்து வந்தாலும்
பளிச்சென இருப்பதெப்படி ?
பருவம் மாறா விருந்தினன்
ஆனாலும் திடீர் என வந்து
திக்கு முக்காட வைக்கிறாய் !
குளிரைக் கொடுத்து
கதகதப்பைத்
திருடிவிட்டாய் !
வெய்யோனுக்கு
ஓய்வளித்து விட்டோயோ ?
குடையெனும்
கிரீடத்தைக்
கொடுத்த கொடையாளி நீ !
வந்தாலும்
வராவிட்டாலும்
பேசுபொருள் நீ !
உனக்கும்
குளிருமல்லவா ?
வா தேநீர் தருகிறேன் !
உன்னால் பிழைத்த
என் வீட்டு ரோஜாவுடன்
அருந்தி மகிழலாம் !