சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிபவர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அதிரடியாக அறிவித்து உள்ளது. இதை மறுத்து, மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு பணியில் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மின்சார வாரியம், தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அறிவித்து உள்ளது.
‘மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் வரும் 7 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தடுப்பூசி செலுத்தாவிட்டால் டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என்றும் மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
‘இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கொரோனா தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை எதிர்வரும் 07.12.2021-க்குள் செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என கடந்த 26.11.2021 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வாரிய தலைவரால் அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே தங்கள் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையை தவறாமல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை உரிய மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்பிக்க அறிவுறுத்தும்படி அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள்/ மதுரை மண்டலம் அலுர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இது குறித்த விரிவான அறிக்கையினை 07.12.2021 சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது”,என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டல மின்சார வாரியம் உத்தரவு மின்வாரிய ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடாத மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்று மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி தெரிவித்துள்ளார். மேலும்,ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.