சென்னை: பொங்கல் தொகுப்பில் நெய் இலவசமாக வழங்குவதன் மூலம் ஆவினுக்கு 135 கோடி வருமானம் கிடைக்கும் என்றும், அதற்காக 2.15 கோடி பாட்டில் நெய் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்புடன் , அரிசி, சர்க்கரை, நெய் உள்பட  21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. இதையடுத்து, அரசு வழங்கும் நெய், ஆவினில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, குடும்ப அட்டை தாரர்களுக்கு தேவையான  2.15 கோடி பாட்டில் நெய் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம்  வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆவின் மூலம் தைத் திருநாளாம் பொங்கலுக்கு 100 மில்லி லிட்டர் அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின்படி சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவின் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு 135 கோடி வருமானம் கிடைக்க உள்ளதாகவும், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.