டெல்லி: வேளாண் சட்டம் வாபஸ் என மத்தியஅரசு அறிவித்து விட்ட நிலையில், போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்து உள்ளார். மற்ற பிரச்சினைகளான எம்எஸ்பி உத்தரவாத சட்டம், விதை மசோதா, பால் கொள்கை போன்ற பிரச்சனைகள் தீரும்வரை நாங்கள் வீட்டிற்கு செல்ல மாட்டோம் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்து உள்ளார்.
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு, விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக ‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020’, ‘விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020’, ‘விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020’ ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த சட்டம் குறித்து விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியாததால், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும், 3 சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக வும் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, தங்களது வீட்டுக்கு திரும்பு மாறும் அறிவித்திருந்தார்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை எதிர்க்கட்சிகள், தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று ஆளாளுக்கு பேசி வருகின்றனர். உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில இடைத்தேர்தலுக்காக இந்த முடிவு என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள். மேலும், 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் வேளாண் கொண்டு வர மத்தியஅரசு முயற்சி செய்யும் என்றும் பல கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால், பிரதமர் மோடி, இதுவரை நேரடியாக டிவியில் தோன்று, நாட்டு மக்களிடம் நேரடியாக மன்னிப்பு கோராத நிலையில், இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், அதற்காக தன்னை மன்னித்துக்கொள்ளும்படியும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றதில் இருந்தும், தேர்தல் மற்றும் வெற்றித் தோல்விக்காக எந்த முடிவையும் இதுவரை வாபஸ் பெற்றது இல்லை; ஒருபோதும் எடுக்காது என்றும், ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டம் குறித்து புரிந்துகொள்ள மறுப்பதால், அந்த சட்டம் வாபஸ் பெறப்படும் என பிரதமர் அறிவித்ததாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாய அமைப்பினர், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நேற்று (ஞாயிறு) கூடி ஆலோசனை நடத்தினர். அதில், விவசாய சட்டங்கள் வாபஸ் குறித்த அறிவிப்புக்கு வரவேற்பு செய்துள்ள நிலையில், அந்த சட்டம் பாராளுமன்றத்தில் முறையாக வாபஸ் பெறாதவரை தங்களது போராட்டம் தொடரும் என்று முடிவு எடுத்துள்ளன. மேலும், ஏற்கனவே அறிவித்தபடி, பாராளுமன்றத்தை நோக்கி டிராக்டர் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் லக்னோவில் இனறு செய்தியளார்களை சந்தித்த பாரதிய கிஷான் விவசாய அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத், வேளாண் சட்டம் வாபஸ் மட்டுமின்றி, எம்எஸ்பி உத்தரவாத சட்டம், விதை மசோதா, பால் கொள்கை போன்ற பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த பிரச்சினைகள் குறித்து அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்படாது. நாங்கள் வீட்டிற்கு செல்ல மாட்டோம் என்று தெரிவித்து உள்ளார்..