கரூர்: கரூர் அருகே வாகன சோதனையின்போது, அதிவேகமாக வந்த வேன் ஒன்று, வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கனகராஜ். இவர் வழக்கம்போல இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாக வந்த ஒரு வேனை நிறுத்த கூறினார். ஆனால், அந்த வேனை ஓட்டி வந்த நபர், வேனை நிறுத்தால், அவர் மீது மோதி விட்டு சென்றதுரு. இதனால், பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில், உயரதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்வாளை மோதிவிட்டுச் சென்ற வேனை பிடிக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வாகன விபத்தில் உயிரிழந்த கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் நா.கனகராஜ் குடும்பத்தாருக்கு ரூ.50லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் நா.கனகராஜ், இன்று 22-11-2021 காலை கரூர்-திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியிலிருந்தபோது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நா.கனகராஜ். மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிலிருக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த நா.கனகராஜ் குடும்பத்தாருக்கு எனது ஆழ்த இரங்கலையும்,வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.