சென்னை: தமிழ்நாட்டில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்காக, விருப்ப மனு விநியோகம் வரும் 21-ம் தேதி தொடங்க இருப்பதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை, மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள்; நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள்; பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் உள்ளன.
இதில், கவுன்சிலர் பதவிகளுக்கு பொதுமக்கள் ஓட்டளித்து, நேரடியாக பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்துவதா; தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள்வாயிலாக மறைமுக தேர்தல் நடத்துவதா என்பது, அரசின் முடிவை பொறுத்து அமையும். தற்போது, தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளில், வார்டு வரையறை செய்யும் பணியும் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயங்கி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி முதல்கட்டமாக பேரூராட்சிக்கு தேர்தலை நடத்தவும், நகராட்சி – மாநகராட்சிக்கு தனியாகவும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் வாக்குப்பதிவு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு குறித்து திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் திமுகவில் வரும் 21-ம் தேதி துவக்கம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட திமுக தலைமை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.10,000, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2500 விருப்ப மனு கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.