ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்து முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4ம், டீசல் லிட்டருக்கு ரூ.5ம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த விலை குறைவு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக விளங்கும் பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு 100 ரூபாயையும் தாண்டியது, சாமானிய மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலை உயர்வு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிரொலித்தது.
அதன் காரணமாக, தீபாவளி பண்டிகை முதல் பெட்ரோல், டீசல் மீதான கலால வரியை மத்தியஅரசு குறைத்து அறிவித்தது. அதனப்டி, 04-11-2021 முதல் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5ரூபாய் குறைத்தும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைத்தும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதன் மூலம், பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது.அதே வேளையில் மாநில அரசுகளும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதைத்தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களும் வாட் வரியை குறைத்து அறிவித்தன. ஆனால், காங்கிரஸ் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் வாட் வரியை குறைக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலையை 5 ரூபாயும் ராஜஸ்தான் மாநில அரசு குறைத்துள்ளது. இந்த வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.