சென்னை: தமிழ்நாட்டில் இனி வாரம் இரு முறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, தினமும் 8லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனாவை முற்றிலும் தடுக்க, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகஅரசு மெகா தடுப்பூசி முகாம்களை அமைத்து தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இனி வரும் நாட்களில், வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பெறத் தகுதியான நபர்களில் 73 சதவிகித மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவிகிதம் தகுதி வாய்ந்த நபர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி மருந்தே, கொரோனா பெரும் தொற்றிற்கு எதிரான முதன்மைக் கேடயம் என்பதை கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த அனைத்து பொது மக்களுக்கும் தடுப்பூசி அவரவர்தம் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் வாரந்தோறும் ஒரு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இதர நாட்களிலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிலையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தகுதி வாய்ந்த பொது மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் கிடைத்திடும் வகையில் வாரந்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமிற்கு பதிலாக, வாரந்தோறும் இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது. தகுதி வாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை விரைவில் வழங்கிடும்
நோக்கில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத மக்களின் பட்டியல் தெரு வாரியாகவும், வார்டு வாரியாகவும் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வாரியாகவும் தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறப்பு தடுப்பூசி தற்காலிக முகாம்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, பொது இடங்களிலும், அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் சிறப்பு முகாம்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரையும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகத்தால் செயல்படுத்தப்படும்.
திங்கட்கிழமை தவிர இதர நாட்களில் அரசு மருத்துவ நிலையங்களில் தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கிட தலைமைச் செயலாளரால், மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை (17.11.2021) காணொலி வாயிலாக கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு துறைகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள்
மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும், கொரோனா தடுப்பூசி தகுதியான அனைத்து மக்களுக்கும் கிடைத்திடும் வகையில், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.