சென்னை: தமிழக அரசு தயாரிக்கும் வலிமை சிமெண்ட் விற்பனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட் உள்பட கட்டுமானப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதனால், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கைக எடுக்க வேண்டும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, அரசு சார்பிலேயே சிமெண்ட் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு அரசின் டான்செம் சார்பில். ‘வலியதோர் உலகம் செய்வோம்’ என்பதை மையக்கருத்தாக கொண்டு ‘வலிமை’ என்ற பெயரில் சிமெண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சிமெண்டின் விற்பனை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

50 கிலோ எடை கொண்ட வலிமை சிமென்ட் விலை குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், 2 தரங்களில் சிமெண்ட் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதன்படி பிரீமியம் ரகம் மூட்டை ரூ. 360  விலையிலும்,  சூப்பீரியர் ரகம் மூட்டை ரூ. 400 என  விற்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியிலும் சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அம்மா சிமென்ட் என்ற பெயரில் அரசு சிமென்ட் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.