புலந்த்ஷகர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தை ஆளும் பாஜ்கா, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க அக்கட்சியின் செயலர் பிரியங்கா காந்தி பல்வேறு கூட்டங்கள், மற்றும் பேரணிகளில் பங்கேற்று வருகிறார்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் முன்னாள் முதவ்லருமான மாயாவதியின் தாய் உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார். தாயை இழந்து வாடும் மாயாவதியைப் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையொட்டி பகுஜன் சமாஜ் – காங்கிரஸ் கூட்டணி உருவாகலாம் என ஊகங்கள் எழுந்தன.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷகரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா, “ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என என்னிடம் கூறி வருகின்றனர். அவர்கள் விருப்பத்துக்கு இணங்க காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும், எனவும் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது எனவும் உறுதி அளிக்கிறேன்” எனக் கூறி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.