சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தமிழகத்தில், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள், இளைஞர்களிடையே போதையாக மாறி, அதன்மூலம் ஏராளமான பணத்தை இழந்து, பலர் தற்கொலை முடிவை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்ககும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது (2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதி) ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்துசட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிர்வாகங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களைச் சட்டத்தை நிறைவேற்றும் போது கூறவில்லை. விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது’ என்று கூறி, தமிழக அரசின், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்தது. அதே வேளையில், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து, தற்போதைய தி.மு.க. அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, தெரிகிறது.