கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7வது நாளாக வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களைப் பார்வையிட்டார். இதன்படி கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிடுகிறார். அதன்பிறகு, நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.