கோவை:
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், உக்கடம் பகுதி, கோட்டைமேடு அடுத்த பெருமாள் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் மகுடீஸ்வரன். பலகார மாஸ்டராக இவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன்தாரணி . கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சின்மயா பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையம் மூலம் மட்டுமே பெரும்பாலான வகுப்புகள் நடைபெற்று வந்தது.
ஆன்லைன் வகுப்பிற்காகப் பெற்றோர்கள் மாணவிக்கு கைப்பேசி வாங்கி கொடுத்துள்ளனர். கைப்பேசி மூலம் பொன்தாரணி வகுப்புகளைக் கவனித்து வந்தார். அப்போது இயற்பியல் ஆசிரியர் வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களில் கைப்பேசி மூலம் பேசி வந்துள்ளார். மேலும் பொன்தாரணியிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகப் பொன் தாரணி மனமுடைந்த நிலையிலிருந்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவி பொன்தாரணி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த உக்கடம் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை மற்றும் தற்கொலைக்குத் தூண்டிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel