டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தவறான தகவல்களை வெளியிட்டு மிகைப்படுத்துகிறது என தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையில் 142 அடி வரை தண்ணீர் சேமிக்கலாம் என உச்சநீதிமன்றம் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கிய நிலையிலும், கேரளா அரசு, இதை வைத்து அங்கு அரசியல் செய்து வருகிறது. அவ்வப்போது முல்லைபெரியாறு அணை இடிந்து விடும் என்ற பீதியையும் அங்குள்ள மக்களிடையே கிளப்பி விட்டு, இரு மாநில உறவுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தனி நபர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மத்திய அரசு சார்பில், முல்லைப் பெரியாறு அணை உறுதியாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாக அறிவித்தது.
அதையடுத்து, நவம்பர் 10ஆம் தேதி வரையில் 139 அடி அளவிற்கும், அதற்குப் பிறகு 142 அடி அளவிற்கு நீரை சேமித்து வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 139 அடியாக உயர்த்துவதற்கே கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டு அழிச்சாட்டியம் செய்து வருகிறது.
இந்த நிலையில் முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு தவறான தகவல்களை அளித்து மிகைப்படுத்தி வருகிறது என்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், முல்லை பெரியாறு அணை பலவீனமானது என ஐநா அறிக்கை அளித்துள்ளதாக கேரள அரசு கூறுவது பொய்யான தகவல். முல்லைப் பெரியாறு குறித்து ஐ.நா. எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை. முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்குவதைக் கைவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், அணையின் உறுதித் தன்மையை அதன் ஆண்டுகளை வைத்து கணக்கிடக் கூடாது. அணையின் வயதை வைத்து கணக்கிடாமல் பராமரிப்பு புதுப்பித்தல் ஆகிய வற்றின் அடிப்படையில் உறுதித்தன்மை கணக்கிட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அணைக்கான வயது அல்லது அதன் ஆயுள் காலம் என்பது வரையறுக்கப்படாதது. மழை, வெள்ளத்தை தாங்கி எது ரை தண்ணீரை சேமித்து வழங்க முடிகிறதோ அதுவரை அணையின் ஆயுள்காலம். அணையின் கட்டுமானம், அடி கட்டமைப்பு பலமாக உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் கேரள அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை புறந்தள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.