சென்னை: அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் மீண்டும் மழை கொட்ட வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில்  மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறியதுடன், பல மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் தாக்கம் இன்னும் மறையக்கூட இல்லாத நிலையில், தற்போது  அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி  உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாகவும், நாளை மறுதினம் வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் 13ந்தேதி  முதல் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

இன்று,  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

நாளை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், புதுச்சேரி, கடலூர் மற்றும் ஏனைய உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுதினம்  வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.