சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் தலைநகர் சென்னை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மற்றும் டெல்டா மாவட்டங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக கொட்டும் மழையிலும் சென்னையில் கடந்த 4 நாட்களாக ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்த முதல்வர் ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு- காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு செய்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
முன்னதாக செங்கல்பட்டு செல்லும் வழியில் கீழ்க்கோட்டையூரில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அப்போது சிறுவனிடமும் பொதுமக்களிடமும் கலந்துரையாடினார். முதல்வருடன் அப்பகுதியை சேர்ந்தவர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அதுபோல கண்டிகையில் ஆய்வு செய்யும் வழியில் தூய்மை பணியாளர்களை சந்தித்து நலம் விசாரித்து, தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.