டெல்லி: 2014ல் தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என நடிகை கங்கனா ரணாவத் கூறியது தேச துரோகம். அவருக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது.
மத்தியஅரசு சார்பில், சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. அதில், பிரபல இந்திப்பட நடிகை கங்கனா ரணாவத்துக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து, தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கங்கனா, ‘‘பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. உண்மையில் இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 1947-ம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான்’’ என்று கூறியிருந்தார்.
இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்த பாஜக எம்.பி. வருண் காந்தி, “கங்கனாவின் கருத்து தேசவிரோதச் செயல். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை இப்படி இழிவுபடுத்தக் கூடாது. அவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, இந்த வீடியோ வைரலானது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பண்டிட், “1947-ல் தங்கள் பிரிட்டிஷ் எஜமானர்கள் வெளியேற நிர்ப்பந்திக் கப்பட்டதை ஆர்.எஸ்.எஸ்ஸால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் அடிமைத்தனத்திற்கு எல்லையே இல்லை. அரை நூற்றாண்டு காலம் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. கங்கனா ரணாவத் அவர்களில் ஒருவர். 2014-ல் உண்மையில் நமது நாட்டின் அடிமைத்தனம் திரும்பியது. இது தான் பாஜக அளித்துள்ள சுதந்திரம்.’’ என காட்டமாக விமர்சித்திருந்தார்
இந்த நிலையில் கங்கனா ரணாவத்துக்கு எதிராக ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி மேனன் மும்பை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதில் கங்கனா கூறிய கருத்து, தேச விரோதமானது, என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 504, 505 மற்றும் 124A இன் கீழ் இந்த புகார் கொடுத்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில் கங்கனா ரனாவத்துக்கு கொடுக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் போர்க்கொடி தூக்கி உள்ளது.
கொசுறு செய்தி:
தமிழக அரசியல் வரலாற்றில் 1947 ஆகஸ்டு 15ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தை, பெரியார் மட்டும் அதைத் “துக்க நாள்” என்று வர்ணித்து அறிக்கை வெளியிட்டதாக வரலாறு கூறுகிறது. தன்னிச்சையாக அவர் விட்ட இந்த அறிக்கைதான், அவருக்கும் அண்ணாவுக்கும் இடையே பிரிவினை ஏற்பட அச்சாரமாக இருந்ததாகவும், அதைத்தொடர்ந்தே, பின்னர் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணா இந்தியாவின் “சுதந்திர தினம் துக்க நாள் அல்ல இன்ப நாள்” என்று மறுஅறிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு பிறகே, அண்ணா தனியாக திராவிட முன்னேற்றக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.