டில்லி
நடிகை கங்கணா ரணாவத் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதித்தற்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கங்கணா, தமக்கு இந்தியச் சுதந்திரம் குறித்து தமக்குப் பல விவரங்கள் தெரியும் எனக் கூறி காங்கிரஸ் என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் தங்கள் நீட்சியை மட்டுமே விட்டு சென்றதாகவும் 2014 ஆம் வருடம் தான் நமக்கு முழு சுதந்திரம் கிடைத்தது எனவும் தெரிவித்தார்.
இந்த உரைக்கு கங்கணாவுக்கு பலரும் சமூக வலைத் தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கங்கணா ஆதரவு அளித்து வரும் பாஜகவின் மக்களவை உறுப்பினர் வருண் காந்தி இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அவ்வகையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கங்கணா ரணாவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மகளிர் காங்கிரஸ் தலைவர் நெட்டா டி சவுசா குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கங்கணா ரணாவ்த் தனது கருத்தின் மூலம் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தேசியத் தலைவர்களை அவமதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது நமது அரசியலமைப்பு மற்றும் தேசிய நிகழ்வுகளுக்கு மரியாதையற்ற செயல் எனவும் தெரிவித்துள்ள அவர் இதற்காக கங்கணா ரணாவத் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கங்கணாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.