ஶ்ரீமுஷ்ணம் பூவராகப்பெருமாள்
திருப்பதி – திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளை வணங்க வேண்டுமென்பது ஐதீகம்.
திருமாலின் பத்து அவதாரத்தில் #வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை – மீன் சுருட்டியில் இருந்து, சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழபுரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீமுஷ்ணம்.
பூவராகப் பெருமாள்
நெடிந்துயர்ந்து மேற்கு நோக்கிய ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் வண்ணமயமான ராஜகோபுரம் இந்த ஆலயத்தை அலங்கரிக்கிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் பெரிய ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரைத் தரிசித்து விட்டு உள்ளே சென்றால், மூலவரின் கருவறையை தரிசனம் செய்யலாம். கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள் துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். கருவறையின் உள்ளே பூவராக மூர்த்தி வீற்றிருந்து சேவை சாதிக்கிறார். இவர் வீற்றிருக்கும் விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.
திருமலை, காஞ்சி, திருக்கோவிலூர், ஒப்பிலியப்பன் கோவில் போன்ற தலங்களில் நெடுமாலாகக் காட்சி தருபவர் இங்கே சிறிய_மூர்த்தியாக அருள்கிறார். மூர்த்தி தான் சிறியது… ஆனால்
கீர்த்தி மிகப் பெரியது. அவரின் தோற்றம் கொள்ளை அழகு. மேற்கு நோக்கியபடி வராகரின் திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படு கிறது.
பிரம்மனின் யாகத்தில் இருந்து தோன்றியதால் #யக்ஞவராகர் என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திருமகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர். வடஇந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் ஶ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் மும்மூர்த்தியும் நானே! என்ற நிலையில் சுயம்பு மூர்த்தியாக திகழ்ந்து மகிமை ஊட்டுகிறார்!