சென்னை: வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. சென்னையில் கடந்த 10 ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை தீவு போல காட்சி அளிக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.இந்த மழைநீரானது மின்மோட்டார் பம்புகள் மூலம் நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் எனவும்,இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 170 கி.மீ. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் கடந்த நான்கு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, இன்று மாலை கடலூர் சென்று ஆய்வு செய்துவிட்டு, அடுத்த 2 நாட்கள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில், மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுக்காப்பான இடங்களில் தங்க வைப்பது மற்றும் வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து விரிவாக விவாதித்த முதலமைச்சர், மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கவும் சிறப்பு அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஆணையிட்டுள்ளார்.