சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கொட்டி வரும் கனமழை காரணமாக, சென்னை மாநகரமே வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வரும் நிலையில், பல பகுதிகளில் ரெயில்வே தண்டவாளங்களும் தண்ணீரால் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் கடுமையான பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை – திருவள்ளூர் க்கு இடையேயான புறநகர் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், ஆவடி மற்றும் அம்பத்தூரில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், எம்ஏஎஸ்-ல் இருந்து திருவள்ளூர் செல்லும் பெரும்பாலான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
திருவொற்றியூர் – கொருக்குப்பேட்டை இடையே கனமழை பெய்து வருவதால் வடக்கு பகுதியில் கும்மிடிப்பூண்டி நோக்கி செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கிய அனைத்து சேவைகளும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.
நாங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம், மேலும் ரயில் சேவைகளில் ஏற்படும் இடையூறுகள் குறித்து தொடர்ந்து உங்களுக்கு அறிவிப்போம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.