சென்னை: பெய்து வரும் கனமழையால், சென்னை தண்ணீரில் மிதக்கிறது. சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 11 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு உள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது வங்கங்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை கொட்டி வருகிறது. தற்போது பெய்து வரும் அதி கன மழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது. சென்னை நகர் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதியுற்று வருகின்றனர்.
மழைநீரை அகற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், காவல்துறையினர் என பல தரப்பில் களத்தில் இறங்கியுள்ளனர்.இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மாநகரில் நேற்று மாலை முதல் அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மீண்டும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் எங்கு நோக்கிலும் மழை வெள்ளமாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரில் மூழ்கியுள்ளது. எனவே சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடசென்னை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. எழும்பூர் முதல் வண்ணாரப்பேட்டை வரை பல பகுதிகளில் முற்றிலும் தண்ணீரால் மிதக்கிறது. அதுமட்டுமன்றி பெரம்பூர் ஓட்டேரி, கொளத்தூர் ஜிகேஎம் காலனி, பூம்புகார், வில்லிவாக்கம், கோயம்பேடு, ரெட்ஹில்ஸ், அலமாதி, மாதவரம், மணலி என பல பகுதிகளில் தண்ணீரில் மிதக்கிறது. பெரும்பாலான பகுதிகளிலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். பல இடங்களில் அதிகாரிகள் யாரும் மழை பாதிப்பை சரி செய்ய முன்வராத நிலையில், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்பட எந்த வசதிகளும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதுபோல தென்சென்னை பகுதிகளில் மடிப்பாக்கம், வேளச்சேரி உள்பட பல பகுதிகளும் தண்ணீரில் மிதக்கிறது.
இதனால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி கமிஷனர் எச்சரித்துள்ளார். இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க உள்ளதால், மேலும் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மீண்டும் கடந்த 2015ம் ஆண்டை நினைவு கூறியுள்ளது. கடந்த ஆட்சியாளர்களும் சரி, தற்போதைய ஆட்சியாளர்களும் சரி, மக்களுக்கு இலவசத்தை கொடுத்து செம்மறி ஆடுகளாக மாற்றிவிட்டு, மக்கள் நலப்பணியிலோ, சுகாதாரம் மற்றும் நீர்நிலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்தாததே, சென்னையின் இந்த நிலைமைக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சென்னையில் நீர் நிரம்பி உள்ள சுரங்க பாலங்கள் விவரம்:
1.வில்லிவாக்கம் சுரங்கப்பாதை 2.தியாகராயர் பகுதியில் மேட்லி சுரங்கப்பாதை, 3.கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை 4.கொருக்குப்பேட்டை சுரங்கப்பாதை 5.அஜாக்ஸ் சுரங்கப்பாதை 6.கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை 7.பழவந்தாங்கல் சுரங்கப்பாதை 8 .தாம்பரம் சுரங்கப்பாதை 9.கணேசபுரம் சுரங்கப்பாதை 10. வியாசர்பாடி சுரங்கப்பாதை 11. அரங்கநாதன் சுரங்கப்பாதை.