டெல்லி: வரும் 13-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்ல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தொடர் மழை கொட்டி வருகிறது. இதனால், சென்னை வெள்ளத்தில் மூழ்கி மக்கள் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை கடலூர் அருகே கரையை கடக்க உள்ள நிலையில், இன்று காலை முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை ஊற்றி வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. நாகை, திருப்பூண்டி ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 31 செ.மீ அளவு மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், வரும் 13-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து, மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் அதன் பிறகே, இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறுமா ? அல்லது புயலாக மாறுமா என்பது தெரியவரும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழ்நாட்டில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்த ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலத்துக்கே சென்னை உள்பட பல பகுதிகள் சின்னப்பின்னாமாக சீரழிந்துள்ள நிலையில், மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானால், தமிழகத்தில் நிலைமை என்னவாகும் என நினைத்தாலே அதிர்ச்சியை அளிக்கிறது.