சென்னை: பெருமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். தேங்கியிருக்கும் தண்ணீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால்  சென்னை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது.  கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்கு வரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் முக ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது தொகுதியான கொளத்தூரின் சில பகுதிகளில் மட்டும் ஆய்வு நடத்தியவர், பின்னர் வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதுபோல நேற்றும் வடசென்னையின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து இன்று 3வது நாளா ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர், வெள்ளத்தத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரமின்றி தவிக்கும் கொளத்தூரின் பல பகுதிகளை ஆய்வு  செய்து வருகிறார். கொளத்தூர் பகுதியில் உள்ள பூம்புகார்,சீனிவாச நகரின் ஒரு பகுதி, காந்தி நகர், சிவசக்தி நகர் போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருப்பதால், மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பலர் வீடுகளை காலிசெய்துவிட்டு உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இதையடுத்து, இன்று முதலமைச்சர் ஸ்டாலின்  அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் அவர் வழங்கியுள்ளார்.

சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட. பெரம்பூர் அருகே உள்ள  ரமணா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார்.

ஐப்பசி ‘அடைமழை’ என்பதை மெய்ப்பிக்கும் தொடர்மழை: நவம்பர் 10ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!