சென்னை
காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மெட்ரோ ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் அதி கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இதற்காகச் சென்னை மெட்ரோ சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்து மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ்,
“சென்னையில் மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான பயணம் செய்ய துரித நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள இரு வழித்தடங்களையும் சேர்த்து 21 சுரங்கவழிப்பாதை மற்றும் 18 உயர்நிலைப்பாதைகளில் ரயில் சேவைகள் நடைபெற்று வருகின்றன. வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப ரயில்களை இயக்க சிறப்பு கண்காணிப்புக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை மற்றும் புயல் காலங்களில் வீசும் காற்றின் வேகம் அனிமோமீட்டர் கருவிகள் மூலம் அளக்கப்பட்டு மெட்ரோ ரயிலின் ஓட்டம் பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் மெட்ரோ ரயில்கள் இயக்க குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மழைநீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றத் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் புயல் காலங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பின் மெட்ரோ ரயில்கள் தற்காலிகமாக நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்காணிப்புக் குழு மழைக்காலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் உரிய பணிகளையும் கருவி செயல்பாடுகளையும் கண்காணிக்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும். மேலும் மின்னல் தாக்குதலில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் அதிநவீன கருவிகள் முக்கிய துணை நிலையங்களைக் கண்காணிக்க வேண்டும்”
எனத் தெரிவித்துள்ளார்.