சென்னை

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை இரவு முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.   இதனால் மக்கள் பெரிதும் துயர் அடைந்துள்ளனர்.    நகரில் மொத்தம் 317 இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது.  கடந்த 2 நாட்களாகச் சென்னை மாநகராட்சி மோட்டார்கள் மூலம் வெள்ள நீரை வெளியேற்றி வருகிறது.  தற்போது 177 இடங்களில் மழை நீர் தேங்கி  உள்ளதால் அங்கு நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்கின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்க வைக்க 169 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.   இவற்றில் 59 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.  தவிர 20 இடங்களில் பொதுச் சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படுகிறது.  இந்த இரு நாட்களில் சுமார் 7 லட்சம் பேருக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த பணியைக் கவனிக்க ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது 14 சுரங்கப்பாதைகளில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மழை நீர் அதிகம் தேங்கும் வேளச்சேரி உள்ளிட்ட 41 பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக படகுகள் மற்றும் படகோட்டிகள் தயார் நிலையில் உள்ளனர்.  மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

தொடர்ந்து இரண்டாம் நாளாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  நேற்று முன் தினம் அவர் எழும்பூர்,கொளத்தூர், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, பள்ளிக்கரணை, வேளச்சேரி,  திநகர் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வு நேற்றும் தொடர்ந்தது.

நேற்று துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் வெள்ள நீர் வடியும் பக்கிங்ஹாம் கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.  இங்கு அமைக்கப்பட்டுள்ள மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கான சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

பிறகு ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், எம்கேபி நகர், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அரிசி, பால், ரொட்டி, பாய், போர்வை, துண்டு போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கினார். பிறகு முதல்வர் கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் திரளாகக் கூடியிருந்த பொதுமக்களிடம் மழை பாதிப்புகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.