2016 ம் ஆண்டு நவம்பரில் புழக்கத்தில் இருந்த 17.74 லட்சம் கோடி ரூபாயில் 86 சதவீதமான 15.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை 8 நவம்பர் 2016 அன்று ஒற்றை அறிவிப்பில் புழக்கத்தில் இருந்து ஒழித்தார் பிரதமர் மோடி.
500 (பழைய) மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாக்காசாக்கி நாட்டைத் தூய்மையாக்கவும், தேச விரோத மற்றும் சமூக விரோத கும்பலிடம் இருந்து கள்ள மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை உதவும் என்று கூறி இன்றோடு ஐந்து ஆண்டுகள் நிறைவைடைந்துவிட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தேச விரோதிகளிடம் உள்ள நோட்டுகள் அனைத்தும் வெற்றுக் காகிதமாக மாறிவிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், புழக்கத்தில் இருந்த மொத்த பணமும் ரிசர்வ் வங்கிக்கு வந்ததன் மூலம் அந்த அறிவிப்பை வெற்று அறிவிப்பாக மாற்றியது.
17.92 லட்சம் வங்கிக்கணக்குகள் சந்தேகத்திற்கு இடமான வங்கிக்கணக்குகள் என்று அறியப்பட்டு இந்த கணக்குகளில் செலுத்தப்பட்ட 4.2 லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியும், இன்னமும் அதற்கான உரிய விளக்கம் கிடைக்கவில்லை.
இந்த நடவடிக்கையால் டிஜிட்டல் பணபரிவர்தனை அதிகரித்த போதும் சுமார் 80 சதவீத பரிவர்த்தனைக்கு பணம் பயன்படுத்தப்படுகிறது.
500 மற்றும் 1000 உயர் மதிப்புள்ள நோட்டுகளையே மக்கள் அதிகம் பதுக்குவதால் இதனை ஒழிக்க திட்டமிட்ட அரசு, அடுத்த சில மாதங்களில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு அதைவிட உயர் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுக்களாக அறிமுகப்படுத்தியது முரண்பாடாக இருந்தது.
2000 ரூபாய் நோட்டு அச்சிடுவதை 2017 ம் ஆண்டு முதல் நிறுத்திய நிலையில் கடந்த மூன்றாண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆர்.பி.ஐ. அறிக்கைப்படி 2020 – 21 ம் ஆண்டு 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கூறியுள்ளது.
இதே நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் இருந்து பதுக்கப்பட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2000 மதிப்புள்ள நோட்டுகளை செல்லாது என்று அறிவிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
பணமதிப்பிழப்பு தீவிரவாத நடவடிக்கையை ஒழிக்கும் என்று கூறிய நிலையில் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நிகழ்வதை வைத்துப் பார்க்கும் போது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள் மாயமாவதும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கேள்விக்குரியதாக்கியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், கோட்டை பூரா அழிச்சி மொத இருந்து போடச்சொல்வது தேசநலனுக்காக தான் என்று கம்பிக்கட்டும் கதையெல்லாம் சொல்லி வரிந்து கட்டியவர்கள்,
ஐந்து ஆண்டுகளாகியும் அதனால் என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறது என்று கூறமுடியாமல் வாயடைத்துப் போயிருப்பதுடன், மோடி அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கல்வெட்டில் பொறித்து வைத்து வரலாற்றில் இடம் பிடிக்க காத்திருக்கிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
நன்றி : தி குயின்ட்