சென்னை
வரும் 9 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் 11 12 தேதிகளில் வடக்கு கடலோர மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும். இதனால், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 9, 10-ம் தேதிகளிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 10, 11, 12-ம் தேதிகளிலும் தமிழக, ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் 11, 12-ம் தேதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.
இதனால், வட கடலோர மாவட் டங்களில் 11, 12-ம் தேதிகளில் சில இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். எனவே, 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தென்கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல, ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 9-ம் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இன்று (நவம்பர் 7) தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இதேபோல, 9 மற்றும் 10-ம் தேதிகளிலும் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் அவ்வப் போது கனமழை பெய்யக்கூடும்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கடந்த அக்டோபர் 31 முதல் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் சூறைக்காற்று வீசியதால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றன. இவ்வாறு சென்ற மீனவர்கள் இன்று காலை கரை திரும்பவுள்ளனர். இன்று முதல் அனுமதி டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.