சென்னை: 
‘ஜெய்பீம்’ திரைப்பட காட்சிக்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது என்ற உண்மையைக் காட்டுவதை விட அந்தப் படுகொலையை அரங்கேற்றியது ஒரு வன்னியர் என்ற பொய்யை நிலைநாட்டுவதற்காகத் தான் பாடுபட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி, வன்னியர் மக்களிடம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒடிடி தளத்தில் வெளிவந்துள்ள ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் மிகவும் கீழ்த்தரமான முறையில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக குறியீடுகளும், உரையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்தக் கதையில் மிகக் கொடூரமான வில்லனாகக் கட்டப்படுகின்ற சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் லாக்கப்பில் தான் செய்த கொலையை மறைக்கத் திட்டமிட்டு உத்தரவிடும் போது அவரது பின்புறத்தில் அனைவருக்கும் நன்கு தெரியும் படி எங்கள் வன்னியர் சங்கத்தின் அக்னி சின்னம் பொறித்த நாள்காட்டி காட்டப்படுகிறது.
இது அந்தக் காட்சிக்குத் தேவைப்படாத அதேநேரத்தில் விசமத்தனமான வன்னியச் சமூக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய செயலாகும். அதேபோல அந்த கொடூரமான உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்திற்குக் குருமூர்த்தி என்று பெயர் சூட்டப்பட்டு நீதிமன்றத்தில் மட்டும் வழக்கறிஞர் கதாநாயகன் சூர்யா குரு என்று அடையாளத்துடன் வாதாடுகிறார். இது மறைந்த எங்கள் வன்னியர் சங்கத்தின் தலைவர் மாவீரன் ஜெ குரு அவர்களை மறைமுகமாகவும் விஷமத்தனமாக இழிவு படுத்துகின்ற வேலையாகும்.
மேலும் அந்த உதவி ஆய்வாளர் கதாபாத்திரம் உள்ளூரில் ஜாதி செல்வாக்கும் பணபலமும் அரசியல் செல்வாக்கும் பெற்றிருப்பதாக மற்ற கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வது போல உரையாடல் அமைக்கப்பட்டுள்ளன. கதைக்களம் நடக்கும் இடம் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டாரம் என்று வன்னியர் சமூக மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. எந்த வகையில் பார்த்தாலும் ஜெய்பீம் என்று இந்த திரைப்படம் வன்னியச் சமூக மக்களை உள்நோக்கத்தோடு கேவலப்படுத்த என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
 இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளின் காரணமாக எங்கள் வன்னியர் சமூக மக்கள் பெருமளவில் கொதிப்படைந்துள்ளனர். மேலும் இத்திரைப்படம் ஜாதி ரீதியான மோதல்களைத் தூண்டும் வகையில் உள்ளதால் உடனடியாக தாங்கள் இத்திரைப்படத்தின் காட்சிகளை நீக்கி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.