சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 144அடியை எட்டியுள்ள நிலையில், இன்னும் 10 நாட்களில் அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பொழிந்து வருகிறத. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளது. இதனால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுஉள்ளது. காவிரியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதையின் மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் ஒகேனக்கலில் ஐந்தருவி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
தொடர்ந்து கன மழை மற்றும் நீர்திறப்பு அதிகரிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் வினாடிக்கு 13,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால், பிலிகுண்டுலுவில், மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து காவிரி ஆற்றங்கரையில் ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து வரும் தண்ணீரால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 3ந்தேதி 112 ஆடியா இருந்த நீர்மட்டம் தற்போது நீர்மட்டம் 114 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்குமானால், இன்னும் ஒருவாரம் அல்லது 10 நாட்களில் மேட்டூர் அணை 120 அடி நீர்மட்டத்தை எட்டி முழுமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.