சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில். பாசத்திற்குரிய தமிழக மக்களுக்கு தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை அதிமுக சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச்செய்தியில், “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க தீபாவளி திருநாளாம் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், பாசத்திற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒளியாய் இருப்பது தெய்வம் தீப வெளிச்சத்தில் தெய்வத்தை காண்பதும் கண்டு கொள்வதும் தொன்று தொட்டு வருகின்ற மரபு.
நரகாசுரன் என்னும் கொடிய அரக்கன் தனது கொடுங்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை பெருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்நன்னாளில் மக்கள் புத்தாடைகளை அணிந்து இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகள் பரிமாறி உறவினர்களுடன் நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த தீப ஒளி திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் இந்த தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று, மனதார வாழ்த்தி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் , புரட்சித்தலைவி அம்மா வழியில் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.