டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற 26ம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குள் வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத் மிரட்டி உள்ளார்.

மத்திய  அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களும், விவசாயிகளுக்கு எதிரான கூறி, நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பபெற வலியுறுத்தி வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 2020ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 26ந்தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இதற்கிடையில், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்ததுடன், டெல்லிக்குள் புகுந்தும், செங்கோடையில் ஏறி கொடி ஏற்றியதும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மேலும் உச்சநீதிமன்றம் தலையிட்டு, குழு அமைத்து, பேச்சுவார்த்தை நடத்தியது. மத்தியஅரசும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால்,  அதை ஏற்க விவசாயிகள் மறுத்து, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், விவசாயிகள் டெல்லிக்குள் புக முடியாதவாறு, சாலைகள் கான்கிரிட்டால் தடுக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, சாலைகளில் வைக்கப்பட்டிருந்த தடைகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திகாயத், சாலையோரங்களில் உள்ள கூடாரங்களை ஜே.சி.பி. மூலம் அகற்ற மாநில நிர்வாகம் முயற்சித்து வருவதாக தெரிகிறது. அவ்வாறு செய்தால், விவசாயிகள், காவல் நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்  கூடாரம் அமைப்பார்கள் என்று மிரட்டிய நிலையில், தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று எச்சரித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,   வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசுக்கு 26ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.  அதற்குள் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், நவம்பர் 27ம் தேதி முதல் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லி எல்லையை அடைந்து போராட்ட களங்களில் போராட்டத்தை வலுப்படுத்துவார்கள் என்று பதிவு செய்துள்ளார். அத்துடன் விவசாயிகள்  போராட்டம் என்று ஹேஸ்டேக் செய்துள்ளார்.

மத்தியஅரசால் இயற்றப்பட்ட  விவசாய சட்டங்களான, விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020; விவசாயிகள் அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020. ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் விவசாயிகள் வெவ்வேறு தளங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்:  விவசாயிகள் தலைவர்களும் மத்திய அரசும் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.