தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் முருகனின் 2வது வீடான திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்வானது, ஆண்டு தோறும் ஐப்பசியில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின்போது நடைபெறும். அதனப்டி இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கொடியேற்றம் வரும் 4ந்தேதி தொடங்குகிகறது.
இதையொட்டி, பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு, சூரசம்ஹாரம் உள்பட சில நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை உள்பட பல்வேறு அறிவிப்புகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. மேலும், விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 4ந்தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது.
முதல்நாளான 4ந்தேதி அன்று அதிகாலை 1மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும். மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
2வதுநாள் முதல் 5வது நாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான 9ந்தேதி ((செவ்வாய்க்கிழமை) 6வது நாள் அன்று சூரசம்ஹாரம் நடைபெறும். அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். பின்னர் கோவில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.
7வது திருநாளான 10-ந்தேதி (புதன்கிழமை) இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 5 ஆயிரம் பேர் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 5 ஆயிரம் பேர் நேரடியாகவும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
6ம் மற்றும் 7-ம் திருநாட்களில் (சூரசம்ஹாரம் / திருக்கல்யாணம்) கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கும் வகையில், கோவில் வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் தரிசனத்துக்கு http://www.tiruchendurmurugantemple.tnhrce.in/இணையதளத்தில் பதிவு செய்யலாம்.