டில்லி
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் 3 மாணவர்கள் 720/720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடெங்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாடெங்கும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.
இந்த தேர்வில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரு மாணவர்களுக்குக் கேள்வி மற்றும் விடைத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. இது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தி முடிக்கும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை நீதிமன்றம் தடை விதித்தது;
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் 2 மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக ஆகக் கூடாது எனத் தெரிவித்து நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியானது. தேர்வர்களுக்கு இ மெயில் மூலமும் முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. இதில் தெலுங்கானா ஐதராபாத்தைச் சேர்ந்த மிருணாள் குப்பேரி, மகாராஷ்டிரா மும்பையைச் சேர்ந்த கார்த்திகா ஜி நாயர், டில்லியைச் சேர்ந்த தன்மய் குப்தா ஆகிய மூவர் முழு மதிப்பெண்ணான 720/720 ஐ பெற்றுள்ளனர்.