வாடிகன்: ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள இத்தால் சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகனில் கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ்-ஐ இன்று சந்தித்து பேசினார்.

கடந்த ஆண்டு (2020) ஜி20 மாநாடு காணொலி வாயிலாக சவூதி அரேபியாவில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், இத்தாலியில் நடைபெற்று வருகிறது. 3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில்  கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில்  அக்.29ஆம் தேதி இத்தாலி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை ரோம்நகருக்கு வந்த பிரதமர் மோடி, வாடிகனில் உள்ள போப் பிரான்சிஸ் அரண்மனைக்கு சென்று அவரை சந்தித்தார். பிரதமர் மோடி நேரில் வரவேற்ற போப் பிரான்சிஸ் அவரிடம் கைகுலுக்கி வரவேற்றார். தொடர்ந்து மற்ற பிஷ்ப்களும் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி போப் பிரான்சிடம் உரையாடினார்.

மோடி வருகையையொட்டி போப் பிரான்சிஸ் அலுவலகத்தில் இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. மேலும், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பான வரவேற்புக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு இரண்டாவது முறையாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாட்டிகன் சிட்டியில் போப் ஃபிரான்சிஸை இன்று (அக்.30) சந்தித்து உரையாடுவதாக  ஏற்கனவே இந்திய  வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா உறுதி செய்துள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி, போப் பிரான்சிஸை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, பிரதமர் மோடி போப் பிரான்சிஸசை  இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதோடு The Climate Climb: India’s strategy, actions and achievements’ என்ற புத்தகத்தையும் பரிசளித்தார்.

இதுகுறித்து பிரதமர் தனதுடிவிட்டர் பக்கத்தில் போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் உலகின் பலதரப்பட்ட பிரச்சினைகள் பற்றி விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் தங்கியுள்ள பிரதமர் மோடி, இன்று ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், இத்தாலி பிரதமர் மரியா டிரோகி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.

ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள், வர்த்தகத்துறை அமைச்சர்கள் ஏற்கனவே சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இத்தாலி- இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு 36% அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காலத்திலும் இந்தியாவில் இத்தாலி நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் தற்போது 700 இத்தாலி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இத்தாலியில் 100க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் செயல்படு கின்றன. அது தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது. மேலும் தொழிற்நிறுவனங்களை திறக்க தேவையான நடவடிக்கை எடுப்பதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

ஜி 20 மாநாடு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் கிளாஸ்கோவில் நடைபெறும் பருவ நிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் (COP26 climate summit) பிரதமர் மோடி பங்கேற்கிறார். இம்மாநாடு நவம்பர் 1, 2 ஆகிய நாட்கள் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பருவநிலை மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.