ஜெனிவா: ஏ.ஒய்.4.2 உருமாறிய கொரோனா இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடியது என்றும் இதனால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தொற்றின் முதல் அலை, 2வது அலையின் பரவலால், இதுவரை 50லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் உருமாறி வரும், ஏ.ஒய் 4.2 வைரஸ் பாதிப்புகளை கடுமையாக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் 100 சதவிகிதம் பனளிக்காத வகையில், நம் நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் ஏ.ஒய் 4.2க்கு எதிராக போதிய எதிர்ப்புத் திறனை அளிக்குமா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏ.ஒய் 4.2 வைரஸ் வீரியமிக்கதாக மாறி பரவி வருவதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், கர்நாடக மாநிலத்தில் சிலருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஏ.ஒய் 4.2 உருமாறிய வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏ.ஒய் 4.2 வைரஸ் இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.