டெல்லி: நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 3 மக்களவை மற்றும் 29 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 2ந்தேதி நடைபெற உள்ளது.
மேற்கு வங்கம், பீகார், கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், அரியானா, அசாம், மேகாலயா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 29 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, இமாச்சல பிரதேசத்தின் மண்டி மற்றும் மத்திய பிரதேசத்தின் காந்த்வா ஆகிய காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும், இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் விறுவிறுப்பாக தங்களது கடமையை செய்து வருகின்றனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதில் பதிவாகும் வாக்குகள் வரும் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் நடக்கும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.