டில்லி
ஜி எஸ் டி உள்ளிட்டு வரியில் ரூ.48 கோடி மோசடி செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜி எஸ் டி வழிமுறைப்படி ஏற்கனவே வரி செலுத்தியோர் தாங்கள் செலுத்திய ஜி எஸ் டி வரியை திரும்பப் பெற முடியும். இந்த விதிப்படி வரி செலுத்தாத பலர் போலி நிறுவனங்கள் மற்றும் ரசீதுகள் மூலம் ஏற்கனவே வரி செலுத்தியதாகக் காட்டி அந்த உள்ளீட்டு வரியைத் திரும்பப் பெறுவதும் நடைபெறுகிறது. அவ்வாறு ரூ.48 கோடி மோசடியை குருகிராம் ஜிஎஸ்டி புலாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
டில்லியைச் சேர்ந்த இருவர் சுமார் 20க்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி உள்ளனர். அவற்றின் மூலம் போலி ரசீதுகளை உருவாக்கி சுமார் ரூ.22 கோடிக்கு உள்ளீட்டு வரி மோசடி செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் கைது செய்த குருகிராம் ஜிஎஸ்டி புலனாய்வு தலைமை இயக்குநரகம் டில்லி நீதிமன்றத்தில் முன்னிறுத்தியது. இவர்கள் 14 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிறுவனங்கள் குறித்த விசாரணையில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சரக்குகளை அனுப்பாமலே ரசீது உருவாக்கி ரூ.26 கோடி ஜி எஸ் டி உள்ளிட்டு வரி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இங்கு நடந்த சோதனையில் ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இரு நிறுவனங்களைத் தவிர வேறு நிறுவனங்களும் பிடிபடலாம் எனக் கூறப்படுகிறது.