திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையால் கேரளாவுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை, முல்லை பெரியாறு அணைகுறித்து வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஏரிகள் குளங்கள், அணைகள் நிரம்பி உள்ள நிலையில், பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இன்றும் ஆலப்புழா, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை மற்றும் காற்று இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை நிரம்பி விட்டதாகவும், அதனால் உடனே தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், அணையை அகற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. பிரபல கேரள நடிகர் பிரித்விராஜ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் என்னவாக இருந்தாலும் சரி, 125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு செயல்பாட்டுக் கட்டமைப்பாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அரசியலையும் பொருளாதாரத்தையும் ஒதுக்கி விட்டு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது என கூறியிருந்தார். இதையடுத்து, முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என, கேரள மாநில மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். Decommission Mullaperiyar Dam என்ற ஹேஷ்டேக்கில் தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நல்லுறவு பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இந்த விவகாரத்தை எழுப்பி, மக்கள் பீதியில் இருப்பதாகவும், கவலைகளை நிவர்த்தி செய்ய அரசு தலையிட வேண்டும் என்றும் கூறினார். அதைத்தொடர்ந்து முல்லை பெரியாறு அணை குறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து இல்லை என்று கூறியதுடன், இது தொடர்பாக வதந்திகளை பரப்பு சமூக வலைதள வதந்திகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
முல்லைபெரியாறு அணை தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் தேவையற்ற பீதியை உருவாக்கி வருவதாகக் கூறிய முதல்வர், முல்லைப் பெரியாறு அணைக்கு ‘ஆபத்து’ என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்து, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இந்த விவகாரத்தில் கேரளாவுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பதாகக் கூறினார்.
முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து, கேரளமுதல்வர் பினராயி விஜயன், அக்டோபர் 24ந்தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு கடிதம் எழுதி எழுந்தார். அதில், அணையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு படிப்படியாக தண்ணீர் திறக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில்தான் முல்லை பெரியாறு அணை நிரம்பி விட்டதாகவும், அது உடைந்தால் கேரளாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், கேரள மாநிலத்தில் உள்ள சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து, மக்களின் பிரச்னைகளை தீர்க்க அரசு தலையிட வேண்டும் என்ற எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை விடுத்து வந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் இந்த விவகாரம் குறித்து விளக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
அதைத்தொடர்ந்தே முதல்வர் பினராயி விஜயன், முல்லை பெரியாறு அணை ஆபத்தில் இருப்பதாகவும், பல லட்சம் பேர் உயிரிழக்கப் போவதாகவும் சிலர் போலியான காட்சியை (சமூக வலைதளங்களில்) உருவாக்கி வருகின்றனர். இதனால் மக்களிடையே தேவையில்லாத பீதியை உருவாக்கி வருகின்றனர்.அப்படி எந்த ஆபத்தும் அங்கு இல்லை என்பதே நிதர்சனம்.
தமிழக அரசு அனைத்து விஷயங்களிலும் கேரளாவுடன் நல்ல முறையில் ஒத்துழைக்கிறது, சில பகுதிகளில் இரு மாநிலங்களுக்கும் சிறிய வேறுபாடுகள் இருப்பதாக வும், இதற்கு விவாதங்கள் மூலம் தீர்வு தேவை என்றும் தெரிவித்துள்ளார்.