திருநெல்வேலி:
தனியார் பேருந்துகளில் சாதி, மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒலிபரப்பக் கூடாது என்று பேருந்து உரிமையாளர்களுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களா ஜாதி ரீதியாக நடந்த கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள போக்கிரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் வழியாக இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் ஜாதி, மத ரீதியான பாடல்கள் ஒலிபரப்பப்படுவதன் மூலம் அதில் பயணம் செய்யும் பொதுமக்கள் இடையே ஜாதிரீதியான மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால், தனியார் பேருந்துகளில் சாதி, மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒலிபரப்புவதைத் தவிர்க்குமாறு பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதனை மீறிச் செயல்படும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.