கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 5
பா. தேவிமயில் குமார்
சொல்வாயா?
உப்பு காற்றின்
வாடையால்
அரித்திடும்
கற் சிலையாக,
போர்க்களத்தின் கடைசிப்
போராளியின்
நிலையாக,
உலகின் கடைசி
உயிரினத்தின்
தவிப்பாக.,
மாற்றி யோசிக்கவும்
முடியாமல்,
மறக்கவும் முடியாமல்
மணித் துளிகள் தோறும் மனதில்
உன் காதல்!
காலச்சக்கரம்
காதல் காலங்களை
மட்டும் திரும்ப கொடுத்திடுமா என்ன?
காலம் கடந்து சொல்லும் காதலை
சொர்க்கத்தில் மட்டுமல்ல
நரகத்திலும்
சேர்க்க மாட்டார்களாம்!
மௌனமாய்
கடக்கும்
மரண வலிகளுக்கு
மாற்று வழி உண்டு……
பிடிக்கவில்லை என்று கூட
சொல்லி விடு
உன் நினைவில்
பித்து பிடித்தேனும்
போகட்டும் எனக்கு……
காலத்தின்
கடைசி நினைவாகவும்
நீயே இருந்து விடு!