கோவை: மதிமுகவில், வைகோவின் மகனுக்கு பதவி வழங்கிய நிலையில், கட்சி மீதான அதிருப்தியால், அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

நேற்று (அக்டோபர் 20ந்தேதி) மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில், வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப் பட்டதாகவும், வாக்களித்த 106 பேரில் 104 வாக்குகள் துரை வைகோவுக்கு கிடைத்துள்ளதால், அவர் மதிமுக கழக செயலாளராக நியமிக்கப் பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இது கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
வாரி அரசியல் குறித்து, அவ்வப்பேது திமுக, பாமக போன்ற கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த வைகோவும் தனது மகனுக்கு பதவி வழங்கியது மூலம் வாரிசு அரசியலை ஊக்குவித்துள்ளார் என புல நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த இரு நாட்கள் முன்பு வரை துரை வையாபுரி அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை என்று கூறி நீலிக்கண்ணீர் வடித்து வந்த வைகோ, தற்போது மகனுக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பதற்கு சமுக வலைதளங்களிலும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், வைகோவின் அறிவிப்புக்கு எதிராக, கோவையை சேர்ந்த மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தைத் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]