நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு..
1972. எம்ஜிஆரும் காஞ்சிபுரமும்.. எப்படிப்பட்ட நினைவுகள்…
இன்று காலை டிபன் சாப்பிட்டு மாத்திரை போட்ட கையோடு பாண்டியன் உணவகத்தில் நாம் உட்கார்ந்திருக்க, திடிரென எதிரில் வந்து அமர்ந்தார், அண்ணன் காஞ்சி பன்னீர்செல்வம்.
யெப்பா சாப்பிடலாம்பா என்று நம்மை அழைத்தவரிடம் இல்லண்ணே, நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன் நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, பேச ஆரம்பித்தோம். பேச்சு அதிமுக பொன்விழா ஆண்டைப்பற்றி போனது..
காஞ்சி பன்னீர்செல்வம்.. சட்டமன்ற உறுப்பினராக.. நாடாளுமன்ற உறுப்பினராக..மாவட்ட பஞ்சாயத்து சேர்மனாக பல்வேறு பதவிகளை வகித்த அதிமுக பழம் பெரும் தலைவர். ஆனால் இன்றைக்கும் சாதாரண தொண்டன் போல் உலா வந்து கொண்டிருப்பவர்.
அண்ணா திமுக ஆரம்பித்த சூழலையும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களையும் பற்றியும் மலரும் நினைவுகள் ஆரம்பித்தன.
திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட பிறகு அதிமுக என்ற தனிக்கட்சி கண்டு முதல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட இடம், பேரறிஞர் அண்ணா பிறந்த மண்ணான எங்களூர் காஞ்சிபுரம்..
வாயை கிளறியதும், 1972- ல் நடந்த சம்பவங்களை வெள்ளம் போல் கொட்ட ஆரம்பித்தார் காஞ்சி பன்னீர்செல்வம்..
”அக்டோபர் 8-ம் தேதி திருக்கழுக்குன்றம் திமுக பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் கணக்கு கேட்டு சர்ச்சையாக வெடித்தது, 10 ஆம் தேதி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, பின்னர் 12 ஆம் தேதி நிரந்தரமாக நீக்கப்பட்டது, அதைத்தொடர்ந்து 17ஆம் தேதி அண்ணா திமுக என்ற புதிய கட்சி உருவானது என ஒரே வாரத்தில் எத்தனையெத்தனை பரபரப்பு சம்பவங்கள்!
ரசிகர் மன்றம் முதலே தலைவரின் பக்தர்களான நானும் கே பாலாஜி (பெட்டிக்கடைக்காரர்)யும் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று காஞ்சி புரத்தில் முதல் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து செய்கிறோம் என்று சொன்னோம், முதலில் மறுத்த தலைவர் பின்னர் ஒப்புக்கொண்டார். அவரை சம்மதிக்க வைக்க அவரின் உறவினர் கேடி குஞ்சப்பனிடம் நாங்கள் நீண்ட நேரம் எடுத்துரைக்க வேண்டியதாயிற்று. அதன்படி கூட்ட தினத்தன்று சுங்குவார்சத்திரம் போய் அங்கு காத்திருந்தோம். தலைவர் வந்தார். அப்படியே தென்னேரி, சேர்க்காடு, வாலாஜாபாத் போன்ற கிராமங்களில் கொடிகளை ஏற்றி வைத்தார்.
தங்கள் ஊர்களில் கொடியேற்ற தலைவரை அழைத்த அத்தனை பேருமே சாமானியர்கள். விவசாயி, டீ கடைக்காரர், சைக்கிள் ஷாப்கார் போன்றவர்கள். அத்தனை பேரின் வேண்டுகோளையும் ஏற்று முகம் சுளிக்காமல் கொடியை ஏற்றிவைத்துவிட்டு இரவு காஞ்சிபுரம் தேரடி பொதுக்கூட்டத்திற்கு வந்தார். தலைவரைக் காண கட்டுக்கடங்காமல் எந்தப்பக்கம் பார்த்தாலும் மக்கள் கூட்டம்.
இன்னொரு பக்கம் எந்த நேரத்திலும் அரசியல் எதிரிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற மோசமான சூழல். இதனால் தலைவரை எந்தப்பக்கம் பத்திரமாக மேடைக்கு அழைத்துச் செல்வது என்று புரியாமல் தவித்தோம். கடைசியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஒரு கால்வாயை கடந்து மசூதி பகுதிக்குள் நுழைந்து மேடை ஏறுவது என்று முடிவுசெய்யப்பட்டது.
இருட்டில் வெளிச்சத்திற்காக நான் தலை மீது பெட்ரோமாக்ஸ் லைட்டை சுமந்து கொண்டு செல்ல பின்னாடியே தலைவர் வந்தார். இது எந்த இடம் என்று கேட்டார், மசூதி என்றதும் உடனே காலில் இருந்த செருப்பை கழற்றி விட்டு வெறும் காலோடு பின்தொடர்ந்தார்.
அப்போது தேரடி பொதுக்கூட்ட மேடை அருகே கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தடியடி நடத்திக் கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்ததும் பதறி போன தலைவர்,’ அவர்களை அடிக்காதீர்கள்’ என்று சொல்லிக்கொண்டே விடுவிடுவென்று மேடை மேலே ஏறினார்.
ஒலிபெருக்கி வசதி சரியாக இல்லை என்பதை புரிந்து கொண்டு வேறொரு ஒலிபெருக்கியை கொண்டுவந்து கூடுதலாக கட்டச்சொன்னார்.
சில நிமிடங்களில் தேடிப்பிடித்து ஒரு முஸ்லிம் நண்பரிடம் இருந்து கூம்பு வடிவ ஸ்பீக்கரை வாங்கி வந்து மேடையில் கட்ட ஆரம்பித்தோம். தலைவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, இப்படி கட்டுங்கள் அப்படி காட்டுங்கள் என்று அவரும் சேர்ந்து கயிற்றை கட்ட ஆரம்பித்தார். அதையெல்லாம் இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
அதன்பிறகு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வந்தது திண்டுக்கல்லுக்கு சென்று தேர்தல் பணிகளை ஆற்ற ஒரு லாட்ஜில் தங்கியிருந்தோம். அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறோம் என்ற தகவல் தெரிந்ததும் மதுரை முத்து ஆட்கள் எங்களை லாட்ஜில் வைத்து தாக்குவதற்கு திட்டம் போட்டனர் ஆனால் லாட்ஜ் உரிமையாளர் சாமர்த்தியமாக எங்களை தப்ப வைத்துவிட்டார்.
ஆனாலும் மறுநாள் இடம் கொடுக்காமல் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டதால், வேறு இடத்தில் தங்கி பிரச்சாரம் செய்தோம்.. திண்டுக்கல்லில் அதிமுக முதல் வெற்றியை பெற்ற போது எங்கள் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
1977 சட்டமன்ற பொதுத் தேர்தல் வந்தபோது என்னை அழைத்து, நீயும் கே பாலாஜியும் எனக்கு காஞ்சிபுரத்தில் இரு கண்கள் போன்றவர்கள். உனக்கு நான் வேண்டுமா எம்எல்ஏ சீட்டு வேண்டுமா என்று கேட்டார்.
நான் தலைவரிடம் உங்களைவிடவா எனக்கு மற்றதெல்லாம்? நீங்களே போதும் என்றேன் எம்எல்ஏ சீட் கே.பாலாஜிக்கு கொடுக்கப்பட்டது..
பெரும்பான்மை சமுதாயத்தை சேராத பாலாஜியை ஜெயிக்கவைக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. உங்களுக்குள் எந்த சண்டையும் வரக்கூடாது என்று கண்டிப்போடு சொல்லி அனுப்பிவைத்தார்.
அதன்பிறகு எம்எல்ஏ, எம்பி, மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் என எனக்கு பல வாய்ப்புகளை வழங்கி வெற்றி பெறச்செய்து அழகு பார்த்தது அதிமுக இயக்கம்..’’
– அருப்புக்கோட்டை புஷ்பவனம் எம்எல்ஏ, ஜேசிடி பிரபாகரன்.. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தின் அந்த காலத்து இல்லத் திருமண விழாவில் எம்ஜிஆர் கலந்து கொள்ள சென்றது, செங்கல்பட்டு, கூட்டேரிப்பட்டு என இரண்டு இடங்களில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் திடீரென எம்ஜிஆரை காண திடீரென கூடிவிட்ட பெருங்கூட்டம்,
கட்சிக்காக சொத்து பத்திரத்தை அனுப்பி வைத்திருந்த ஒரு பெண்ணிடம் திண்டிவனத்தில் எம்ஜிஆரே தேடிச்சென்று சொத்து பத்திரத்தை அந்தப்பெண்ணிடம் திருப்பி ஒப்படைத்து நன்றிப் பெருக்குடன் பெரும் தொகையை உதவியாக கொடுத்தது.. இன்னும் பல பேரைப் பற்றிய நினைவுகளை பற்றி காஞ்சி பன்னீர்செல்வம் பேச பேச நேரம் போனதே தெரியவில்லை ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது..
அவ்வளவையும் பின்னர் நேரம் கிடைக்கும்போது பதிவு செய்தே ஆக வேண்டும்