சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்ரீந்தர் சிங், உள்கட்சி பிரச்சினை காரணமாக, கட்சி மற்றும் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில், விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேப்டனின் திடீர் அறிவிப்பு மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபின் எதிர்காலத்திற்கான போர் நடந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப் மக்களின் நலன்களுக்காக, ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கள் பிழைப்புக்காக போராடும் எங்கள் விவசாயிகளுக்காக சொந்த அரசியல் கட்சி தொடங்குவதை விரைவில் அறிவிப்பேன் என்று டிவிட் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உள்குத்து காரணமாக, முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை விட்டு விலக காங்கிரஸ் தலைமையால் நெருக்கடிக்கு உள்ளானார். இதனால், பதவியை விட்டு விலகியதுடன், கட்சியிலும் இருந்து விலகினார். தொடர்ந்து டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். இதனால், அவர் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தற்போது, தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் வாய்ந்த தலைவராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங். ராஜீவ் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டவர். மன்னர் குடும்ப வாரிசான இவர் ராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார். தற்போது 79 வயதாகும் அமரிந்தர் சிங் சமீபத்திய ஆண்டுகளில் நவ்ஜோத் சிங் சித்துவுடனான அரசியல் மோதல் காரணமாக கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். அதனைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் தனது முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் அமரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல், அமரிந்தர் விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
அவரது பதிவில் “பஞ்சாப் எதிர்காலத்துக்காக போராட்டம் தொடருகிறது. மிக விரைவாகவே பஞ்சாப் மாநில மற்றும் மக்களின் நலன், கடந்த ஓராண்டாக போராடி வரும் விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன்
விவசாயிகளில் நலனை காக்கும் வகையில் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காணப்பட்டால் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பேன்.
ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட அகாலிதளத்தில் இருந்து தனியாக பிரிந்த குறிப்பாக திண்ட்சா மற்றும் பிரம்புரா பிரிவுகளுடனும் கூட்டணி வைப்பேன்.
பஞ்சாப் மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டேன். உள்ளிருந்து மற்றும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காக்க பஞ்சாபுக்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவைப்படுகிறது. இன்று ஆபத்தில் இருக்கும் அதன் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை நான் என் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்”
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.