சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சுமார் 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்கின்றனர்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த (அக்டோபர் 2021) 6ந்தேதி மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 9ம் தேதி நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தேர்தலில் 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று பதவியேற்கின்றனர். நாளை மறுதினம், தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி, 9 மாவட்டங்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த ஊராட்சிகளில் இன்று பதவியேற்கின்றனர். இதற்காக அனைத்து ஊராட்சிகளிலும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவி ஏற்றுக் கொண்டபின்னர், நாளை மறுதினம் நடைபெறும் மறைமுக தேர்தலில் வாக்களிப்பார்கள்.
ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 9 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் உட்பட மூவாயிரத்து இரண்டு கிராம பஞ்சாயத்துகளில் துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.